Tuesday 2 June 2020

சில கேள்விகளும் சில பதில்களும் ______________________


சில கேள்விகளும் சில பதில்களும் 1
_______________________________________
டாக்டர்.வி.ஆனந்தமூர்த்தி:இந்தியாவில் தனது 52வது வயதில் 15 முதுகலை பட்டங்களுடன் முனைவர் பட்டமும் இணைந்து பெற்று சாதனை புரிந்தவர். இருவர் 15க்கு மேற்பட்ட முதுகலை பட்டங்கள் பெற்றிருந்தாலும் முனைவர் பட்டம் பெறவில்லை.இவரின் 10 பேர் மேற்பார்வையில் முனைவர் பட்டம் பெற்றதும் இவரது மேற்பார்வையில் 8 பேர் முனைவர் பட்டம் பெற படித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
35 ஆண்டுகால இலக்கிய அனுபவமும் எழுத்தறிவுப்பயிற்சி அனுபவமும் பெற்றவர். இவர் வாழ்க்கையே சுவை நிறைந்த நாவலாகும். அவர் நாவல் எழுதாது மிக அருமையான ஆய்வுகள் இரண்டு செய்திருக்கிறார்.1990 முதல் எஸ்ஸார்சி என்ற எழுத்துப்புரட்சி மூலம் நண்பராகி ,என் எல்லா முயற்சிகளையும் உற்றுக்கவனித்து ஒரு குடும்ப நண்பரானவர். 
அவர் என்னைச் சில கேள்விகள் கேட்க விரும்பினார்.நான் பதில் அளித்தேன்.அவரையே சில கேள்விகள் கேட்டேன்.அவரும் பதிலளித்தார். அதை தொடர்ந்து ஒரு தொகுப்பாகத் தர விரும்புகிறேன்.
ஆனந்தமூர்த்தி:உங்கள் கதைகள் பெரும்பாலும் நடுத்தர மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களை விவசாய தொழில் சார்ந்த மையமாகக் கொண்டதாகவே இருப்பதன் காரணம் என்ன குறிப்பாக உங்கள் கதையை வழியாகவும் உணர முடிகிறது அதற்கான காரணம்?
.நான்: ஒரு திருத்தம்.மத்திய தரக்குடும்பம்  என்று நீங்கள் கூறும் அளவுகோலில் அடிமட்ட மத்தியதரம் ,மத்திய தர மத்தியதரம், மேல்மட்ட மத்தியதரம்  என்ற மூன்று பிரிவுகள் உண்டு . அந்த மூன்று பிரிவினர் பற்றியும் நான் எழுதியிருக்கிறேன் .அதிர்ஷ்ட வசமாகவோ துரதிர்ஷ்ட வசமாகவோ நான் அன்றாடக்கூலி வாங்கி வீடு வாசலற்று  வயிறு பிழைக்கும் உலகின் கோடானுகோடி பாட்டாளி மக்கள் தொகையில் ஒருவனாகப் பிறக்கவில்லை. அந்த வாழ்க்கை என்னவென்று எனது 12ம்  வயதிலிருந்து 24ம் வயது வரை ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்ந்து அனுபவித்திருக்கிறேன். விவசாய தொழில் சார்ந்த சார்ந்த மையமாகக் மையமாக என் படைப்புகள் இருப்பதற்கு முக்கிய காரணம் என் தந்தை ஆரம்பகாலத்தில் விவசாயி. என் மாமனார் ஒரு விவசாயி. என் மைத்துனர் ஆசிரியர் மற்றும் விவசாயி.இன்றும் ஏர் பிடித்து உழுவார்.மண்ணை நேசிப்பவர். சுற்றுச்சூழலே அப்படித்தான் உள்ளபோது, நான் மட்டும் எப்படி வேறுவிதமாக  இருப்பேன்?